Thursday, August 1, 2019

ஜங்க் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் தன் அரங்கிற்கென வாசித்துவர  இச்சிறுகதையை பரிந்துரைத்துள்ளார்.


ஜங்க்

      ஜார்ஜ் ஆர்வேல் சொன்னது சரிதான்.

  “ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன்பு கடந்து போன தலைமுறையை விட தான் புத்திசாலித்தனமானதாகவும், அடுத்து வரும் தலைமுறையை விடவும் அறிவானதாகவும் கற்பனை செய்து கொள்கிறது”.

     ஒவ்வொரு தலைமுறையிலும் முட்டாள்கள் இப்படித்தான் உருவாகிறார்கள்உண்மையில் இது எப்படி சொல்லப்பட்டிருக்க வேண்டுமென்றால்:

     “ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன்பு கடந்து போன தலைமுறையை விடவும் முட்டாள்தனமானதாகவும், அடுத்து வரும் தலைமுறையை விட அறிவற்றதாகவும் இருப்பதை அதுவாகவே கற்றுக் கொள்ள வேண்டும்.”

     எங்கள் தெருவில் வசிக்கும் என் வயதொத்த இளைஞன் ஒருவனை எனக்குத் தெரியும்ஒரு கையில் சே குவேராவையும், இன்னொரு கையில் ஏசு கிறிஸ்துவையும் பச்சை குத்தியிருந்தான்

     “இது நிரந்தர பச்சையா இல்லை தற்காலிகமானதா?”

     “ஏன்இது நிரந்தரமானதுதான்

     “இவங்க எக்ஸ்பைரி டேட் முடிஞ்சு ரொம்ப நாள் ஆகுது.”

     முகத்தில் கோபம் பொங்க அவன் என்னைப் பார்த்தான்ஒரு கையில் லேடி காகாவையும், இன்னொரு கையில் ஸ்டீவ் ஜாப்ஸையும் பச்சை குத்த சொன்னேன். அதுதான் முட்டாள்கள் மட்டுமே நிரம்பிய இந்த நூற்றாண்டிற்கு பொருத்தமாக இருக்கும்.

     “நீ அவங்களைத்தான் பச்சை குத்தியிருக்கியா?”

     “என்னுடைய ஆதர்சங்கள் எஸ்கிமோக்களும், கடற்கொள்ளையர்களும்தான்

     “அப்படியானால் நீ ஒரு பதினைந்தாம் நூற்றாண்டு மனிதன் தான்.  அல்லது அதற்கு முன்பே கடந்து போன நூற்றாண்டுகளின் மனிதனாகக் கூட இருக்கலாம்”.


     இந்திரா நகரிலிருக்கும் ஒரு டேட்டூ குத்தும் செண்டரில் கடற்கொள்ளையர்களின் அல்லது எஸ்கிமோக்களின் உருவமோ அல்லது அவர்களது சின்னங்களோ இருக்கிறதாவென்று கேட்டதற்கு நாவில் ஒரு மணியைக் குத்தியிருந்த வடகிழக்கிந்தியப் பெண் இல்லையென்று தலையாட்டிவிட்டு, வேண்டுமானால் அப்படி ஒரு சின்னத்தை உருவாக்கித் தருவதாகச் சொன்னாள்அவள் சொன்னது எனக்கு உற்சாகமாக இருந்ததுநாங்கள் இருவருவமாகச் சேர்ந்து கடற்கொள்ளையர்களை, அவர்களது கொடியை, முத்திரைகளை புதிதாக உருவாக்க முடியும்.  வாடிக்கையாளர்கள் குறைவாக வரும் வார நாட்களில் மூன்று நாட்களை நாங்கள் அதற்காக செலவழித்தோம்அந்த வடகிழக்கிந்தியப் பெண் மூன்று நாட்களில் என்னுடைய தோழியானாள்அவள்தான் எனக்கு டேட்டூ குத்துவதற்கு கற்றுக் கொடுத்தாள்நாங்கள் உருவாக்கிய குதிரைத்தலை முத்திரையை அவள் முதுகில் பச்சை குத்திய தினத்தில், செண்டரில் இருந்த குஷன் நாற்காலியில் ஃபாஸில் மீன்களாக உறைந்தோம்.

     அவளுடைய தோழர்களும், தோழிகளும் குடியிருந்த வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றாள்கிதார் வாசிக்கத் தெரிந்த ஒருவன் எரிக் கிளாப்டனின்லே(ய்)லாவை வாசிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்அங்கிருந்த ஆறு பேரும் நகரத்திலிருக்கும் வெவ்வேறு சலூன்களில் சிகையலங்காரம் செய்பவர்களாக பணி புரிகிறார்கள்ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் சிகையலங்காரம் செய்யும் சலூன்கள் அவை. அவர்களுக்கு நான் அங்கே வந்தது பிடிக்கவில்லைஅவர்கள் அந்நியர்களை அனுமதிப்பதில்லைஅப்படி அனுமதிப்பது பாதுகாப்பற்றதென்று நினைத்தார்கள்நான் அதற்குப் பிறகு அவர்கள் வசிக்கும் வீட்டிற்குப் போகவில்லைமஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், ஊதா நிற குட்டைப் பாவாடையும் அணிந்திருந்த என்னுடைய வடகிழக்கிந்தியத் தோழியின் முகம் வாடிப்போனதை இப்போது நினைத்தாலும் என்னால் உணர முடியும்அல்சூர் கோயில் திருவிழாவின் போது நடைபாதையில் அமர்ந்து பேட்டரியால் இயங்கும் கையளவு இயந்திரத்தால் பச்சை குத்தும் நாடோடிப் பெண்ணின் நினைவிலிருந்த பலநூறு டிசைன்கள் பல உடல்களில் பதிந்தனநூற்றாண்டுகளின் நினைவுகள் தேங்கிய முத்திரைகள் அவைநாடோடிப் பெண்ணிடம் என்னுடைய தோழி சிறுது நேரம் உரையாடினாள்வடகிழக்கிந்தியப் பெண்ணும், நாடோடிப் பெண்ணும் சேர்ந்து ஒருநாள் இம்மாநகரத்திற்கே பச்சை குத்துவார்களென்று அவளிடம் சொன்னேன்அவளுடைய சிறிய உதடுகள் மெலிதாக விரிந்தனலிப்ஸ்டிக் விளம்பரப் புகைப்படம் நினைவில் வந்தது.

     அவளுடைய அம்மா இறந்து போனாள்அவளுடைய தோழர்களும், நானும் சேர்ந்து விமான டிக்கெட் எடுத்து அவளை அனுப்பி வைத்தோம்அவள் திரும்பி வரவில்லை என்பதை நான்கு மாதங்கள் கழித்துதான் உணர்ந்தேன்அவளுடைய தோழர்கள் வசித்த வீட்டிற்குப் போனேன்வீடு பூட்டியிருந்ததுஅதற்கு பிறகு அவளைத் தேடுவதைக் கைவிட்டேன்.


     ஒரு கூர்க் ரெஸ்டாரண்டில் மிளகு கலந்த பன்றிக்கறியை நாங்கள் மூன்று பேர் சுவைப்பதற்கு முன்பாக என்னுடைய அலுவலக நண்பனின் அறையில் அவர்கள் இரண்டு பேரும் கஞ்சா புகைப்பதை வெகுநேரம் வேடிக்கை பார்த்தேன்காய்ந்த இலையில் தீப்பற்றிய நெடியுடன் அறை முழுதும் படர்ந்த புகையின் நடுவே நாங்கள் மூவரும் குகைமனிதர்களைப் போல வெளியே கவிழ்ந்த இருட்டைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தோம்.  ஒருவன் கூர்கி, மற்றொருவன் ஹுப்ளியிலிருந்து வந்திருந்தவன்தமிழர்களின் பத்தாம்பசிலித்தனத்தைப் பற்றி வெகுநேரம் என்னுடைய கூர்கி நண்பன் பேசினான்என்னால் தைரியமாகச் சொல்ல முடியும் தென்னிந்தியாவிலேயே பழகுவதற்கு சிறந்த மனிதர்கள் கூர்கிகள் தானென்றுஅவனிடம் சில மறுப்புகளை, தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை, இந்தோனேசிய கடற்கொள்ளையர்களை விரட்டிய சோழர்களின் கப்பல்களை விவரித்தேன்.

     “நாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்கிறோம் நண்பாமின்சார விளக்குகள் இல்லாத கடந்த நூற்றாண்டுகளில் அல்ல”.

     ஹுப்ளியிலிருந்து வந்தவன் தமிழ்நாட்டின் சில கோயில்களுக்குச் சென்று வந்தததைக் குறித்து பேச ஆரம்பித்தான்திருவண்ணாமலைக்குச் செல்லும் கன்னடர்களின் மத்தியில் அவன் வசிக்கிறான்கடைக்காரர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் வரை ஏமாற்றுக்காரர்களாகவே தெரிகிறார்கள்யாரிடமும் நட்பான ஒரு முகமில்லை.  தமிழர்கள் வாய்க்கால்கள் முழுக்க சாக்கடை ஓடும் நகரங்களில் நீருக்காக போராட்டம் நடத்துகிறார்கள்நான் அவர்கள் கஞ்சாவை இழுத்து முடிப்பதற்காக காத்திருந்தேன்கையிலிருந்த ஃபாஸ்டர்ஸ் டின்னில் குளிர்ச்சி முற்றிலுமாக குறைந்திருந்ததுபியரின் கடசி மிடறைப் போல அவர்கள் தமிழர்களைக் குறித்து சொன்னது கசந்தது அல்லது தமிழர்களே பியரின் கடைசி மிடறாக இருக்க வேண்டும்.

     பன்றிக்கறியை முடித்ததும் ஆளுக்கொரு பெப்சியை ஆர்டர் செய்தோம்வயிற்றில் சுரக்கும் அமிலம் நாம் உண்பதைச் செரிக்க போதாதுசெரிமானத்திற்கு பெப்சியை அல்லது கோகோ கோலாவை சார்ந்திருக்கும் தலைமுறை நாம்.

     கூர்கி நண்பன் என்னுடைய வடகிழக்கிந்தியத் தோழியை நான்கு மாதங்கள் கழித்து ஒரு கேள்வியால் நினைவூட்டினான்என்னுடைய நினைவில் அவள் ஒரு தற்காலிக டேட்டூவாக மாறியிருந்ததை பன்றிக்கறியின் நாற்றத்தோடு வெளியே வந்த ஏப்பத்தின் மத்தியில் உணர்ந்தேன்.


     அமெச்சூர் ராக் குழுவில் மின்கிதார் வாசிக்கும் நண்பனின் மூலமாகத்தான் எனக்கு ராக் இசை பரிச்சயமானது.  “மெட்டாலிக்காஇசைக்குழுவின் நிகழ்ச்சியைப் பார்க்க டிக்கெட் ஒன்றிற்கு நான்காயிரம் ரூபாய்கள் செலவழித்தோம்கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்குப் போக முடிவெடுத்ததால் பிளாக்கில் தான் வாங்க முடிந்ததுஅந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என்னுடைய நண்பன் பித்தேறியவனாக அவனுடைய வாழ்க்கையின் இலட்சியமே அடுத்த ஜிம்மி ஹெண்டிரிக்ஸாவதுதான் என்று முடிவெடுத்தவனைப் போல எந்நேரமும் மின்கிதாரோடு கட்டிப் புரண்டான்.  “ரோலிங் ஸ்டோன்குழுவினரின்சேடிஸ்ஃபேக்ஸன்பாடலை அவன் வாசிக்கும் போதெல்லாம் நான் கவனமாகக் கேட்பேன்.  மின்கிதாரை அவன் டென்னிஸ் ராக்கெட்டைப் போல பாவிக்கிறான்உயரத்திலிருந்து வரும் மஞ்சள் பந்திற்காக அவனுடைய மின்கிதார் பலமுறை காத்துக் கொண்டிருந்தது.

     சில ஆங்கிலப் பாடல்களை எழுதினான்இரவில் உறக்கம் கலைந்து எழும்போதெல்லாம் அவன் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்ப்பேன்எழுதி முடித்ததும் வாசிக்கக் கொடுத்தான்இரத்த வெள்ளை அணுக்களைப் பற்றி அவன் எழுதிய பாடலின் சில வரிகள் எனக்கு உடனே பிடித்தன.  குதிக்கும் திரவநிலை டென்னிஸ் பந்துகள் என வெள்ளை அணுக்களை அவன் உருவகப்படுத்தியிருந்ததை பாராட்டினேன்இருவருமாகச் சேர்ந்துபிங்க் ஃபிளாய்ட்குழுவினரின் போஸ்டரை வாங்கினோம்அடிக்கடி ஆதர்சங்களை மாற்றும் அவன் பல போஸ்டர்களை வாங்கி அடிக்கி வைத்திருக்கிறான். U2 குழுவினரின் ஆல்பமொன்றின் புகைப்படமான இராணுவத் தொப்பியணிந்த சிறுவனின் போஸ்டரை மட்டும்தான் அதிக தினங்கள் அறையில் ஒட்டியிருந்தான்.

     அவனோடு அறையைப் பகிர்ந்து கொள்வதற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாய் முன்பணமும், மாதம் ஆறாயிரம் ரூபாய் வாடகையும் கொடுக்க முடிகிற ஒருவர் தொடர்பு கொள்ளவும் என அவன் கொடுத்திருந்த விளம்பரத்தைப் பார்த்துதான் அவனை அழைத்தேன்இரண்டு முறை அவனுடைய அறையைப் பார்த்த பின்பே அவனோடு அறையைப் பகிர்ந்து கொள்ளும் முடிவை எடுத்தேன்என்னிடமிருந்த ஜூலியோ கொர்த்தஸாரின் “Axolotlகதையை இருவருமாக வாசித்தோம்அந்த உயிரியைப் பார்ப்பதற்கு கப்பன் பார்க்கிலிருக்கும் அக்வேரியத்திற்குப் போனோம்கண்ணாடித் தொட்டிகள் முழுக்கத் தேடியும் எங்களால் அதனைப் பார்க்க முடியவில்லைஒரு மெக்ஸிக நீர்வாழ் உயிரியை கப்பன் பார்க் அக்வேரியத்தில் தேடிய நாங்கள் அறைக்குத் திரும்பியதும் அடுத்ததாக ஒருAxolotlன் போஸ்டரை ஒட்டுவதென்று முடிவெடுத்தோம். இணையத்தில் அதன் புகைப்படத்தைத் தேடி டிடிபி செண்டர் ஒன்றில் போஸ்டரை வடிவமைத்தோம்.  அறையில் ஒட்டினோம்பழுப்புநிறத்தில் ஒரு பேய் போலத் தெரியும் ஆக்ஸோலோடலின் போஸ்டரை ஒட்டிய தினத்திலிருந்து எங்களுக்கு துர்க்கனவுகள் வருவதை கண்டுபிடிக்க வெகுநாட்களானதுஞாயிற்றுக்கிழமை மதிய உணவை சமைத்து முடித்ததும் அவன்தான் தொடர்ந்து அவனுக்கு வரும் துர்க்கனவுகளைக் குறித்து பேச ஆரம்பித்தான்எனக்கும் அப்படித்தான் கனவுகள் வருகின்றதென்று அவனிடம் சொன்னேன்பல விசயங்களை யோசித்து கடைசியாக Axolotl போஸ்டர்தான் அதற்கு காரணமென்று முடிவு செய்தோம்அதைக் கிழிப்பதற்கு பதிலாக அதனை பெயர்த்து எடுத்து ஒரு பாலித்தீன் உறையில் சுற்றி மொட்டை மாடியிலிருந்த பழைய மரச்சாமான்களின் உடைசல்களுக்கு மத்தியில் புதைத்தோம்.   அதன் பின்பும் துர்க்கனவுகள் தொடர்ந்தனவேறொரு போஸ்டரை கண்டுபிடிக்க வேண்டும். புத்தர், தாந்திரிகத்தில் சொல்லப்படும் ஆயிரம் இதழ் தாமரை, யுனிகார்ன் அல்லது ஒரு மாயன் சின்னம்எங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போனதால் பல இரவுகளை துர்க்கனவுகளின் மேடையில் பலியிட்டோம்.


     ஒரு சிக்கன் லெக்பீஸின் அளவிற்கோ, போர்னோகிராபியைப் போன்றோ கடவுளொன்றும் சுவாரசியமானவரில்லைமூன்று மாதங்கள் தொடர்ச்சியாக என்னுடைய இணைய பில் மொத்தமும் போர்னோகிராபி தளங்களைப் பார்ப்பதற்கே செலுத்தினேன்.  மனித உடல்களின் விநோதமான அசைவுகளை, ஏரோபிக்ஸை பிரதிபலிக்கும் பெண்களின்  உடல் நிலைகளை, காலத்தால் மூப்படைந்துவிடாத பாலுறுப்புகளுக்கு இடையிலான வன்முறையை எனது கணிணியின் திரை ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்களுக்குக் காட்டியதுமறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் இதுவரையிலும் மனிதக் கண்களால் ஊடுருவ இயலாத வெளிக்குள் நமது கண்களாகவே ஒளிந்திருக்கிறதுவிடுதிகளில் தங்க நேரிடும் இணைகள் அறையில் எங்காவது கேமரா ஒளிந்திருக்கிறாதாவென்று கண்ணாடிகள், மின்விசிறிகள், ஏர்கண்டிசனர்கள், கட்டிலின் இடுக்குகளில் கூட விரல் நுழைத்துத் தேடுகிறார்கள்புத்திசாலித்தனமான பெண்கள் காதலர்களின் செல்போன்களை அணைத்து வைக்கச் சொல்கிறார்கள்போர்னோகிராபி தளங்களைப் பார்ப்பதை நிறுத்துவதென்று முடிவெடித்தேன்போர்னோகிராபி அடிமைகளை மீட்பதற்கென்றே ஒரு இரகசிய சங்கம் இருப்பதாக நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் குறுஞ்செய்தியாக ஒரு தகவல் எனக்கு வந்தது

     எனக்கு என்ன தேவையென்பதை பிரபஞ்சத்தின் மூலையில் யாரோ அறிந்திருக்கிறார்கள்.

     அதிலிருந்த எண்ணிற்கு பல முறை அழைத்தேன்என்னுடைய அழைப்புகள் ஏற்கப்படவில்லைசில நாட்கள் கழித்து அந்த எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்ததுஆச்சரியத்தக்க வகையில் என்னை அழைத்தது ஒரு பெண்அவள் ஒரு முகவரியை எழுதச் சொன்னாள்அடுத்து வந்த சனிக்கிழமை நான் அந்த முகவரிக்குப் போனேன்நான்கு இளைஞர்கள் அமர்ந்திருந்த வரவேற்பரையில் ஓரத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.  நாற்பது வயதுள்ள ஒருவர் உள்ளேயிருந்து வந்தார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தவர் எங்கிருந்து வருகினேன்று கேட்டார்என்னுடன் பேசிய அதே பெண் குரல்அவருடைய குரல்நாண்களின் சரிசெய்ய முடியாத கோளாறால் இளம் வயதில் அதிகமாக யாருடனும் பழகமுடியாமல் போனதை பின்னொரு நாள் விவரித்தார்பதின்பருவத்தில் எல்லோருக்கும் இடைப்பகுதியில் மாற்றம் வந்தால் அவருக்கு வந்த மாற்றம் தொண்டையில் நிகழ்ந்த நபும்சகம்.

     தன்னைத்தானேசெகண்ட்-இன்-கமாண்ட்என்றழைத்துக் கொண்ட எப்போதும் குளிர்க்கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவனைப் பார்த்தேன்அவன் தான் இரகசிய சங்கத்தின் விதிமுறைகளை எனக்கு சொன்னான்.

      “மாபெரும் ஒழுக்கக்கேட்டிற்கு எதிராக, பெண்களின் மாண்பைச் சூறையாடும் வழக்கத்தை ஒழிக்க, உடல்நலத்தை வீடியோ துண்டுகளால் இழக்கும் அடிமைகளின் வாழ்வை மாற்றியமைக்க, காண்வெளியிலிருந்து வெளியே மீட்டு சுற்றியிருக்கும் உலகைப் பார்க்க வைக்க நாம் ஓர் இராணுவத்தைப் போல இயங்க வேண்டும்

     அவனுடைய சிற்றுரை போருக்குப் போவதற்கு முன்பாக இராணுவ ஜெனரல்கள் ஆற்றும் நீண்ட பிரசங்கத்தைப் போன்றே இருந்ததுஅவனுடைய புல்லட் பைக் கூட இராணுவப் பச்சை நிறத்திலிருந்ததுஆறுமாதங்கள் காத்திருந்து அதை வாங்கியதாகச் சொன்னான்

      “உனக்கு ஏன் இராணுவத்தின் மீது இவ்வளவு மோகம்

      “Without discipline you cannot win a war. போர்னோகிராபி அடிமைகள் நிகழ்த்துவது அவர்களுக்கே எதிரான ஒரு போர். டிசிப்ளின் இல்லையென்றால் அதிலிருந்து மீள முடியாதுஇராணுவம் டிசிப்ளினால் கட்டப்பட்ட ஓர் அமைப்பு”.

      “செகண்ட்-இன்- கமாண்ட்” உலகின் அத்தனை போர்னோகிராபி அடிமைகளையும் மீட்கும் கடமை அவனுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதைப் போலப் பேசினான்.

       அங்கே போவதற்கு முன்பே நான் போர்னோகிராபி பார்ப்பதை நிறுத்தியிருந்தேன்ஓர் ஆர்வத்தில் தான் போனேன்உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படாத இரகசிய சங்கமான அதில் சில மாதங்கள் ஓய்வு நேரத்தில் பணியாற்றினேன்.  “செகண்ட்-இன்-கமாண்ட்சங்கத்திலிருந்து வெளியேறுவதாக என்னிடம் ஒருநாள் சொன்னான்அவன் எப்படி போர்னோகிராபி அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்தான் என அன்றுதான் கேட்டேன்

     “ஒருநாள் என்னுடைய அம்மாவின் புகைப்படத்திற்கு முன் இனிமேல் போர்னோகிராபி பார்ப்பதில்லையென்று சத்தியம் செய்தேன்அதன் பின்பு இன்று வரை ஒருமுறை கூட அதைப் பார்த்ததில்லை.” 

     போர்னோகிராபி அடிமைகளின் மீட்பரானசெகண்ட்-இன்-கமாண்ட்ஒரு மருத்துவமனையில் லேப்-டெக்னிசியனாக வேலை செய்கிறான்அதன் மங்களூர் கிளைக்கு அவன் மாற்றப்பட்டதும் அவனுடைய இராணுவப் பச்சை புல்லட்டில் மூட்டைகளைக் கட்டிக் கொண்டு என்னிடம் விடைபெற்றுக் கிளம்பினான்அவனுடைய பைக்கின் பின்னே “La Poderosa” என்ற ஸ்டிக்கர் புதிதாக ஒட்டப்பட்டிருந்தது.

     ஆங்கில தினசரியின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புகளில் பத்தி எழுதும் ஓர் இளம் சிந்தனையாளன் சாக்லேட் பிரெளவ்னியின் காதலன்அவன் இதுவரையிலும் தின்ற சாக்லேட் பிரெளவ்னிகளின் எண்ணிக்கையை எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விடவும் அதிகமானதென்பான்அவனும் நானும் வார இறுதியில் ஒரு பக்கார்டி ரம்மை வாங்கினோம்அவனுடைய வீட்டிற்குப் போனோம்புத்தகங்கள் நிரம்பி வழிந்த அவனுடைய படுக்கையறையில் கட்டிலில் அவனும் நாற்காலியில் நானுமாக அமர்ந்தோம்நாம் இருவரும் சேர்ந்து சில மேற்கோள்களை எழுதுவோம் என்றான்அவனுடைய போஸ் மியுசிக் சிஸ்டத்தில் நுஸ்ரத் பதே அலிகானின் பாடலை ஒலிக்க விட்டான்பக்கார்டி ரம் முடிவதற்கு முன்பாக நாங்கள் சில மேற்கோள்களை உருவாக்கினோம்.  என்னுடைய மொழிபெயர்ப்பு பலவீனமானதென்பதால் ஆங்கிலத்திலேயே இங்கே தருகிறேன்.

1.   Writing is a kind of voyeuristic adventure using language as its medium
2.   Even the storage in “Cloud” has become technical and termed as a service to be paid
3.   When you are in slumber and feel that you are in slumber it is someone in the dream who is becoming insomniac
4.   Measure the meaning of anything with the absurdity of everything
5.   Fantasy of lunacy is not a disorder to be treated medically but a subject to be studied for which poetry is the only tool
6.   There are languages which can be spoken but can’t be written….it is opposite in “C”
7.   When a cab driver talks more with the passenger he is frustrated with driving.  When he honks the horn more he is frustrated with the passenger
8.   Cry when you want to laugh.  It is the opposite which hold the other for long
9.   Babies smile in pink.  Old people smile in black.  The colors fade in meantime. That is called Life
    


போதையில் சிந்திப்பதை எழுதக்கூடாதென்ற அறவுணர்வு எழுந்ததும் இளம் சிந்தனையாளன் காகிதத்தை மடித்து வைத்தான்.  பொன் வறுவலாக வறுக்கப்பட்ட கிரில் சிக்கனை அவன் கடித்தான்.

     “ஒரு நாள் நான் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பிளாட்டோ ஆவேன்”

     “நான் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அரிஸ்டாட்டில் ஆவேன்”

     இந்த உலகில் யாரொவரும் ஒன்று பிளாட்டோவியனாக இருக்க வேண்டும் அல்லது அரிஸ்டாட்டிலியனாக இருக்க வேண்டும்.  எங்களால் இதை யார் சொன்னதென்று அப்போது நினைவுகூர முடியவில்லை.
    
     டெஸ்க்டாப் கணிப்பொறிகளுக்கான உள்ளங்கையளவு CPU தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட வங்காளி ஒருவனை என்னுடைய மின்கிதார் வாசிக்கும் அறை-நண்பன் அறிமுகம் செய்து வைத்தான்.  அவன் வடிவமைத்து வைத்திருந்த CPUவைக் காட்டினான்.  தேய்க்கும் பெட்டியளவிற்கு இருந்தது. மேஜை டிராயரைப் போல CPUவை அதன் மேற்பரப்பு சட்டகத்திலிருந்து இழுக்கும் வண்ணம் வடிவமைத்திருந்தான்.  அவனுடைய உழைப்பும் நம்பிக்கையும் என்னை வியக்க வைத்தது.  அதற்கு கவர்ச்சிகரமான பெயர் வைத்து ஒரு பிராண்டாக உருவாக்க வேண்டுமென்றான்.  அவனுக்கு கறுப்பு நிறம் பிடிக்கும்.  அவனிடமிருந்த மியூசிக் சிஸ்டத்தையும், கணிப்பொறியையும் வயரில்லாத இணைப்பில் இணைந்திருந்தான்.  பல டெராபைட்டுகள் சேமிப்புத் திறனுடைய ஒரு சர்வரை வீட்டில் வைத்திருக்கும் அவன் அத்தனை மின்சாதனங்களையும் கறுப்பு நிறத்திலேயே வாங்கியிருந்தான். 

     “சர்வரில் என்னவெல்லாம் சேமித்து வைத்திருக்கிறாய்”

     “ஒரு மனிதனால் சேமிக்க முடிகிற அனைத்தும்.  பாடல்கள், புத்தகங்கள், வீடியோக்கள், தரவுகள், மென்பொருட்கள், புகைப்படங்கள்”

     இந்த உலகம் விநோதமானவர்களின் கூடாரம்.  அந்தக் கூடாரத்தின் அடியில் அவன் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தான்.  அவனுடைய மனைவி அவளுடைய பழைய காதலனோடு போய்விட்டாள்.  அதன் பின்பு அவனால் ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை.  அதன் பின்பு அவனால் CPUவிற்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

     நானும், என் அறை-நண்பனும் அவனை சந்தித்தோம்.  இம்மாதிரி வாழ்வைச் சிதைக்கும் ஒரு நெருக்கடியை நாங்கள் இதற்கு முன்பு சந்தித்ததேயில்லை.  காதல் பிரிவுகளை எளிமையாக கையாளத் தெரிந்த எங்களுக்கு அவனுடைய மனைவியின் இம்மாதிரியான வெளியேற்றத்தை கையாள்வதற்கு சிந்திக்கத் தெரியவில்லை.  இலக்கியத்திலிருந்துதான் என்னால் உதாரணம் தேட முடிந்தது.

     லியோ டால்ஸ்டாய் “அன்னா கரினீனாவை” வெளியிட்டது 1878ல்.  ஸ்காட் ஃபிரிட்ஜெரால்ட்டின் “கிரேட் கேட்ஸ்பி” வெளிவந்தது 1925ல்.  இரண்டும் ஏறக்குறைய திருமண வாழ்க்கைக்கு வெளியே ஏற்படும் உறவைத்தான் பேசுகின்றன.  ஆனால் ஒரு ரொமாண்டிக் ரஷ்ய நாவலுக்கும், ஜாஸ்-ஏஜ் அமெரிக்க நாவலுக்கும் ஐம்பது ஆண்டுகளில் எத்தனை வேறுபாடு.  அன்னா கரினீனா அவளுடைய குற்ற உணர்வினால் தற்கொலை செய்து கொள்கிறாள்.  ஜே கேட்ஸ்பியுடன் உறவு வைத்திருக்கும் டெய்ஸிக்கு குற்ற உணர்வில்லை.  டெய்ஸியின் கணவன் டாம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரோடும் நியுயார்க் நகரின் ஒரு ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்துகிறான்.  முடிவில் என்னாகிறது?.  ஜே கேட்ஸ்பி கொல்லப்படுகிறான்.  அதன் பின்னும் டெய்ஸி டாமோடுதான் வாழ்கிறாள்.  மறுகரையில் ஒளிரும் பச்சை விளக்கைப் பார்ப்பதற்கு ஜே கேட்ஸ்பிதான் இல்லாமல் போகிறான்.

     வாழ்க்கையின் மிக முக்கியமான சிக்கலுக்கு இலக்கியத்தில் பதில் தேடும் எங்கள் முயற்சியின் இறுதியில் எங்களுடைய வாங்காளி நண்பன் அவனுடைய மனைவியை விவாகரத்து செய்துவிடுவதென்று முடிவு செய்தான்.  அவனுடைய வாழ்க்கையை தொடர்புச்சாதன-உலகின் நாவலாக யார் எழுதுவார்களென்று எனக்குத் தெரியாது.  ஆனால் அன்னா கரினீனாவைப் போலவோ, கிரேட் கேட்ஸ்பியைப் போலவோ இல்லாமல் வேறு முடிவுகள் கிடைக்கலாம்.   அவனுடைய ஆராய்ச்சிக்குத் திரும்பிய அவன் பல நாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தான்.

     டினோசர் குட்டியை பிரசவித்த ஒரு பெண்ணைக் குறித்த கதைகள் உலவ ஆரம்பித்தன.  CFL பல்புகள் முளைக்கும் செடிகள்,  இரண்டாவது முறையாக ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஏலியன்கள், ஆல்ப்ஸ் சிகரத்தில் ஊறும் ஒயின் ஊற்று, கடலுக்கடியில் தண்டவாளங்கள் அமைக்கும் மீன்கள், சிரிக்கும் புலிகள், ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் இறங்கும் விண்கலம், டெலஸ்கோப்பின் முனையில் தெரியும் வானில் இதழ் விரிக்கும் மஞ்சள் ரோஜா,  கேலக்ஸியைக் கடக்கும் வண்ண வண்ண பலூன்கள்,  பழைய நிலவறைகளிலிருந்து கிளம்பும் சித்திரக் குள்ளர்கள், ஆடு மேய்க்கும் ரோபோட்டுகள், ஆற்றின் குறுக்காகப் படுத்துக் கொள்ளும் திமிங்கலம்,  சதுரமான சூரியன், வாளேந்திய ஈசல்கள்,  கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் மென்பொருட்கள்,  சிகரெட் பெட்டியிலிருக்கும் புதிய உலகங்களுக்கான வரைபடங்கள்,  உயிருள்ளவர்களை சிலையாக்கும் குதிரை, கடலைப் பொக்கின் உள்ளே ஒளிந்திருக்கும் துப்பாக்கிக் குண்டுகள், நிலத்தடியில் நகரும் நட்சத்திரக் கூட்டம், கபாலங்களின் மேல் அமர்ந்திருக்கும் குழந்தை, இரவில் இசைக்கும் சிற்ப மனிதர்கள், ஏழுவண்ண நீர் நகரும் ஆறுகள், ஆலைப்புகையில் தோன்றும் யானை உருவங்கள்,  நகரும் மேகங்களின் உள்ளே ஒளிரும் பச்சை நிற விளக்குகள்….

     எங்களால் இதற்கு மேல் ஒரு விசித்திர உலகை கற்பனை செய்ய முடியவில்லை. நாங்கள் தாமஸ் பின்ச்சனின் “Against The Day” நாவலில் வரும் ஹைட்ரஜன் ஆகாயக் கப்பலைப் போல ஒன்றை உருவாக்கி அதனுள்ளே அமர்ந்து எட்கர் ஆலன் போவின் உலகிற்குள் பயணிக்கும் ஒரு ஆங்கிலப் பாடலை எழுதினோம்.  மின்கிதார் இசைக்கும் என்னுடைய அறை-நண்பனும் நானும் இணைந்து செய்த கடைசிக் காரியம் அதுதான்.  ஆனால் எங்களால் அந்த உலகை ஒரு பாடலாக மாற்ற முடியவில்லை. முழுமையான உலகாகவும் மாற்ற முடியவில்லை. எம்ப்ரையோனிக் நிலையில்தான் அனைத்துமே இருந்தன.  ஒருவேளை இந்த நூற்றாண்டின் ஒவ்வொரு வருடத்தையும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியோடு கடக்கும் நாம் அனைவருமே அடுத்து வரும் தலைமுறையின் எம்ப்ரையோனிக் நிலை தானோ?

     அன்று நாங்கள் இருவரும் இரவு உணவிற்காக இறாலை சமைத்தோம்.  கூடவே ஒரு டயட் கோக்கைக் குடித்தோம்.  நள்ளிரவைத் தாண்டியதும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. வடகிழக்கிந்தியப் பெண் என்னைப் பார்க்க வருவதாக செய்தி அனுப்பியிருந்தாள்.


     எனக்கு என்ன தேவையில்லை என்பதையும் பிரபஞ்சத்தில் யாரோ அறிந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment